மீண்டும் முககவசம் அணிவது கட்டாயம்
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் இருந்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக வெகுவாக குறைந்திருந்தது. தற்போது சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இந்தியாவில் பாதிப்பு அதிகரிக்கும் முன்னே முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளதுடன், மாநிலங்களில் மீண்டும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரவலை எதிர்கொள்வது குறித்து இன்று நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் “பொதுமக்கள் அனைவரும் மீண்டும் முககவசம் அணிவதை கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும். பூஸ்டர் தடுப்பூசி போடாதவர்கள் போட்டுக் கொள்ள வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்தியாவில் பாதிப்புகளின் நிலவரத்தை கணக்கில் கொண்டு மீண்டும் முககவசம் கட்டாயமாக்கப்படலாம் என கூறப்படுகிறது.