மாலத்தீவில் சிக்கித்தவிக்கும் தமிழர்களின் நிலை என்னவாகுமோ? அன்புமணி ராமதாஸ்
மாலத்தீவில் தனியார் நிறுவனத்தில் பணிக்காக அழைத்துச் செல்லப்பட்ட 48 இந்தியர்களை அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அன்புமணி ராமதாஸ் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’மாலத்தீவில் தனியார் நிறுவனமொன்றில் பணிக்காக அழைத்துச் செல்லப்பட்ட 13 தமிழர்கள் உள்ளிட்ட 48 இந்தியர்களுக்கு, அவர்கள் 6 மாதங்களுக்கு முன் பணியில் சேர்ந்த நாளில் நாளில் இருந்தே ஊதியம் வழங்கப்படவில்லை. அதைக் கண்டித்து அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்!
பணியை விட்டு தாயகம் திரும்பவும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அவர்களின் கடவுச்சீட்டுகளை சம்பந்தப்பட்ட நிறுவனம் சட்டவிரோதமாக பறித்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து அங்குள்ள இந்திய தூதரகத்திடம் புகார் செய்தும் எந்த பயனும் ஏற்படவில்லை!
மாலத்தீவில் சிக்கித்தவிக்கும் தமிழர்களின் நிலை என்னவாகுமோ? என தமிழகத்திலுள்ள அவர்களின் குடும்பத்தினர் அச்சத்தில் உறைந்துள்ளனர். அவர்கள் அனைவரையும் உடனடியாக மீட்டு சொந்த ஊர்களுக்கு அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்!’’ என்று தெரிவித்துள்ளார்.