உக்ரைன் போர் சூழல்; ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வாரா புதின்?
ஜி-20 மாநாட்டு தலைவர்களுக்கான கூட்டம் வருகிற 2023-ம் ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. இதனை இந்திய அமைப்பாளர்கள் முறைப்படி அறிவித்து உள்ளனர். சர்வதேச அளவில் உக்ரைன் போர் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள சூழலில், இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் கலந்து கொள்வாரா? என்ற கேள்விக்கு அந்நாட்டு தரப்பில் பதில் அளிக்கப்பட்டு உள்ளது.
இதுபற்றி ரஷிய ஜி-20 ஷெர்பா குழுவின் தலைவரான ஸ்வெட்லானா லுகாஷ் அந்நாட்டு அரசு ஊடகத்திற்கு அளித்த பேட்டியின்போது, ஜி-20 மாநாட்டுக்கு அவர் (ரஷிய அதிபர் புதின்) நிச்சயம் செல்வார் என நம்புகிறேன். ஆனால், இந்த விசயத்தில் அவரே முடிவெடுக்க வேண்டும். அடுத்த மாநாடு நடைபெறுவதற்கு இன்னும் ஓராண்டு உள்ளது. அதனால், இதுபோன்ற கேள்விக்கு என்னால் பதிலளிக்க முடியாது. எனக்கு தெரிந்தவரை, அவர் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அனைத்து வகையிலும் வாய்ப்புகள் உள்ளன என கூறியுள்ளார்.