நடிகர் விவேக்கின் நிறைவேறாத ஆசை
ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறந்த நகைச்சுவை நடிகராக தன்னுடைய ஆளுமையைக் நிலை நிறுத்தி வந்தவர் நடிகர் விவேக்.
தமிழ் திரைப்படத் துறையில் ‘சின்னக் கலைவாணர்’ என அழைக்கப்படும் விவேக். நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர்.
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் திரைப்படத்துறை வரலாற்றிலேயே, நகைச்சுவை வாயிலாக சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை சொல்லுவதில் வல்லவர், ‘கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன்’. அவரைப் பின்பற்றி, தான் நடித்த பெரும்பாலானப் படங்களில் லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு, சமூக சிந்தனைக் கருத்துக்களைப் பெருமளவில் சொல்லி வந்தார். “சின்னக் கலைவாணர்” என அழைக்கப்பட்டார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே. அப்துல் கலாமின் மிகப்பெரிய அபிமானியான விவேக், கலாம் பெயரில் ’க்ரீன் கலாம்’ என்கிற மரம் நடும் முன்னெடுப்பை, கலாமின் வழிகாட்டுதலின் கீழ் தொடங்கினார்.
அனைத்து முன்னணி நடிகர்களுடனும் புதிய நடிகர்களுடனும் நடித்துவிட்ட விவேக்கிற்கு திரைத்துறைக்கு வந்த நாளிலிருந்தே கமலுடன் சேர்ந்து நடிக்கவேண்டும் எனும் ஆசை இருந்து வந்தது. ஷங்கர் இயக்கத்தில் கமலின் நடிப்பில் ’இந்தியன் 2’ தொடங்கப்பட்டது. ‘என்னுடைய நீண்டகாலக் கனவு உலகநாயகன் கமலுடன் நடிக்க வேண்டும் என்பது. அந்தக் கனவு ‘இந்தியன் 2’ வின் மூலமாக நனவாகப் போகிறது. அவருடன் இந்தப் படத்தில் நானும் நடிக்கிறேன்’ என்று தன் நீண்ட கால கனவு குறித்து தன் சமுக்க வலைதள பக்கங்களில் தெரிவித்திருந்தார். ஆனால் அவரது ஆசை நிறைவேறவில்லை.
அதுபோல் அவர் திரைப்படங்களை இயக்கவும் திட்டமிட்டு இருந்தார் அதுவும் நிறைவேறவில்லை.