ஜி-20 மாநாடு குறித்து ஆலோசனை: முதல்வர் ஸ்டாலின் நாளை டெல்லி பயணம்
ஜி-20 மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் நாளை டெல்லி செல்கிறார்.
இந்தோனேசியா நாட்டின் பாலி தீவில் ஜி-20 உச்சி மாநாடு கடந்த மாதம் 15, 16-ம் தேதிகளில் நடந்தது. மாநாட்டு நிறைவு விழாவில், ஜி-20 அமைப்புக்கு தலைமை வகிக்கும் பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா கடந்த 1-ம் தேதி ஏற்றது.
இந்நிலையில், ஜி-20மாநாடு டெல்லியில் 2023 செப்டம்பரில் நடக்க உள்ளது. இதன் ஒரு பகுதியாக, அனைத்து மாநிலங்களிலும் ஜி-20 கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. அந்த வகையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையில் ஜி-20 கூட்டத்தை சிறப்பாக நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, அனைத்துக் கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. டெல்லியில் இக்கூட்டம் நாளை நடக்க உள்ளது.
இதில் பங்கேற்குமாறு நாடு முழுவதும் உள்ள 40-க்கும்மேற்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதை ஏற்று, முதல்வர் ஸ்டாலின் நாளை காலை 10 மணிக்கு விமானம் மூலம் டெல்லி சென்று ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார். அன்று இரவே அவர் சென்னை திரும்புகிறார். பிரதமர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தாவும் பங்கேற்க உள்ளார்.