சபரிமலைக்கு பக்தர்கள் சென்ற பஸ் கவிழ்ந்து விபத்து
ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் இருந்து 44 பக்தர்களுடன் தனியார் பேருந்து ஒன்று சபரிமலைக்கு சென்றுகொண்டிருந்தது. பக்தர்கள் அய்யப்பனை தரிசனம் செய்ய உற்சாகமாக பஜனை பாடியபடி சபரிமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
இந்த பேருந்து பத்தனம்திட்ட மாவட்டம் , லாஹ அருகே விளக்கு வஞ்சி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சபரிமலைக்கு சென்ற தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 வயது சிறுவன் மணிகண்டன் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பத்தனம்திட்டா அரசு பொது மருத்துவமனை மற்றும் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 43 பேரும் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பஸ்சின் அடியில் சிக்கிய 3 பேரை நீண்ட நேர முயற்சிக்கு பின் வெளியே எடுத்தனர்.விபத்தில் சிக்கிய பஸ்சை இரண்டு கிரேன்கள் மற்றும் இரு ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டது. பிரேக் செயலிழந்து விபத்து ஏற்பட்டதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கூறப்பட்டுள்ளது.