மின் கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதில் தாமதம் - மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என துறைசார் ஆணைக்குழு அறிவிப்பு
இலங்கை மின்சார சபையினால், மின் கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக இந்த வருடத்திற்குள் மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு, மின் கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரையொன்று இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
எனினும், முன்வைக்கப்பட்ட மின் கட்டண குறைப்புக்கான குறித்த பரிந்துரை, போதுமானதாக இல்லை என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அறியப்படுத்தியிருந்தது.
அத்துடன், அவற்றை மீளாய்வுக்கு உட்படுத்தி நவம்பர் மாதம் 9ஆம் திகதிக்கு முன்னதாக மீண்டும் புதிய பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்குத் தெரியப்படுத்தியிருந்தது.
எனினும் குறித்த மின் கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கு இலங்கை மின்சார சபை நவம்பர் மாதம் 22ஆம் திகதி வரை கால அவகாசம் கோரியிருந்தது.
இந்தநிலையில், குறித்த பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கு இலங்கை மின்சார சபை, மேலும் இரண்டு வாரங்கள் கால அவகாசம் கோரியுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனவே, இவ்வாறான பின்னணியில், மின் கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ளக் குறைந்தது 6 வாரங்களாவது தேவைப்படும் எனவும், அதற்கமைய இந்த வருடத்துக்குள் மின்கட்டண திருத்தத்தை மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்படுவதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
000