வரலாற்றில் மோசமான வறட்சியை எதிர்கொண்டுள்ள சோமாலியா
2011-ஆம் ஆண்டு சோமாலியாவில் ஏற்பட்ட பஞ்சத்தில் 10 லட்சம் பேர் வரை உயிரிழந்தனர். அதேபோன்ற வறட்சி நிலையை சோமாலியா இந்த ஆண்டும் எதிர்கொண்டுள்ளது. வரும் மாதங்களில் சோமாலியாவின் நிலைமை மேலும் மோசமாகலாம் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், டிசம்பருக்குள் சோமாலியாவில் 3 லட்சம் பேர் வரை உயிரிழக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
ஆப்பிரிக்க கண்டத்தின் கொம்பு பகுதியில் அமைந்துள்ள சோமாலியாவில், நிலையான அரசு அமையாதது, கடந்த நான்கு வருடங்களாக பருவமழை பெய்யாமல் தவறியது வறட்சிக்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது.
சோமாலியாவின் தற்போதைய நிலை என்பது அந்நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் மோசமான வறட்சியாகவே பார்க்கப்படுகிறது. சோமாலியாவில் சுமார் 70 லட்சம் மக்கள் மனிதாபிமான உதவிகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.லட்சக்கணக்கான குழந்தைகள் ஊட்டசத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில்தான் சர்வதேச நாடுகளின் உதவியை சோமாலியா கோரியுள்ளது.
கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவு வறட்சியினால் குழந்தைகள் மரணம் அதிகரித்து வருவதாக சோமாலிய அதிகாரிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். மேலும் ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக சோமாலியாவுக்கு சர்வதேச நாடுகளிலிருந்து கிடைக்கும் நிதி உதவிகள் கிடைப்பதில் தாமதம் நீடிக்கின்றது. சோமாலியா எதிர் கொண்டுள்ள இந்த சூழல் விரைவில் மாற வேண்டும் என்று ஐ. நா.வின் சர்வதேச மனித உரிமை அமைப்பும் கோரிக்கை விடுத்துள்ளது.