இலங்கையின் ஆயுர்வேதத் துறையை உலகம் முழுவதும் பரவச் செய்தல் வேண்டும் : பிரதமர்
இப்பூமியையும் அதன் மரபுரிமைகளையும் பாதுகாத்து, மனித வாழ்விற்கு சக்தியை ஊட்டக்கூடிய, இலங்கையின் ஆயுர்வேதத் துறையை, உலகம் முழுவதும் பரவச் செய்தல் வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்கத்தின் ஆயுர்வேத மருத்துவச் சங்கத்தின் பத்தொன்பதாவது ஆண்டு நிறைவு விழாவானது இன்று கொழும்பில் இடம்பெற்ற வேளையிலேயே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார். மேலும் சட்டதிட்டங்களில் உள்ள குறைபாடுகளுக்கான வாதப்பிரதிவாதங்களில் ஈடுபடுவதற்கு இனியும் அவகாசம் இல்லையெனவும் அவர் தெளிவுபடுத்தினார்.
உணவுப் பாதுகாப்பிற்கு, சுகாதாரத் துறைக்கு, நோய்களை இல்லாதொழிப்பதற்கு என பற்பல சிறந்த நிகழ்ச்சித்திட்டங்களை அரசு முன்னெடுத்து வருகின்றது. பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கு காணிகளை விடுவிப்பதற்கும் அரசு தீர்மானம் மேற்கொண்டுள்ளது. அடுத்து வரும் ஒரு சில மாதங்களுள் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட காணிகளை பயிர்ச்செய்கைக்காக விடுவிக்கவுள்ளது. இக்காணிகளில் ஆயுர்வேதத் துறைக்குத் தேவையான பயிர்ச்செய்கைகளும் உள்ளடக்கப்படல் வேண்டும் என்ற உறுதிப்பாட்டையும் அரசு கொண்டுள்ளது என பிரதமர் மேலும் தெரிவித்தார்.