வடக்கில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையின் பின்னணியில் ஆயுதப்படைகளே உள்ளது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சுடர்சனின் "பயணம்" எனும் கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் முதன்மை அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் இப்போது நாம் பத்திரிகைகளை பார்க்கும் போது எமது மண்ணில் இடம்பெறும் சட்டவிரோத செயல்கள் தொடர்பிலும் குடும்ப வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலும் விபத்துக்கள் தொடர்பிலுமே அதிக செய்திகள் இருக்கின்றன. விபத்துகளாலும் தற்கொலைகளாலும் எமது இளம் தலைமுறையினர் மரணிக்கின்றனர் இவற்றுக்கான பிரதான காரணமாக இருப்பது எமது மண்ணில் தலைவிரித்தாடும் போதைப்பொருள் பாவனையே ஆகும்.இலங்கையிலுள்ள படைகளில் ஏறத்தாழ 70 சதவீதமானவர்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களிலேயே குவிக்கப்பட்டிருக்கின்றனர். போதை வஸ்தை கொண்டுவர அனுமதிப்பவர்களும் அதனை கொண்டு வருபவர்கள் மற்றும் விற்பவர்களை ஊக்குவிப்பவர்களாகவும் அவர்களே காணப்படுகின்றனர்.போதைப் பொருள் வியாபாரிகளை பொலிசார் கைது செய்வதில்லை. பெருந்தொகையான கஞ்சா இங்கு கடத்தப்படுகின்றது என்றால் அதனை தடுக்கின்ற வல்லமை இலங்கையின் படைகளுக்கு இல்லையா? இவர்கள் தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கவும் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுக்கவும் மட்டும் இவர்களுக்கு தெரியுமா?தமிழ் இளைஞர்களை தமது இனம் பற்றியோ தேசம் பற்றியோ சிந்திக்க விடாது தடுக்கும் நோக்கில் திட்டமிட்டே போதைப்பொருள் பாவனையை இவர்கள் ஊக்குவிக்கிறார்கள். இவற்றுக்கு மத்தியிலும் 20 வயதே ஆன இளைஞன் டர்சன் தன் தேசம் பற்றியும் இனம் பற்றியும் பயணம் எனும் கவிதைத் தொகுப்பு நூலினை வெளிடுவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.போதைப்பொருள் பாவனையில் இருந்து எமது எதிர்கால சந்ததியினரை மீட்க வேண்டிய பொறுப்பு வெறுமனே அரசியல் வாதிகளிடம் மட்டும் சுமத்தமுடியாது சமூகப் பொறுப்புணர்ந்து அனைத்து தரப்பினரும் இணைந்தே கட்டுப் படுத்த வேண்டும். பெற்றோர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் மதத் தலைவர்கள் அரச உத்தியோகத்தர்கள் அரச சார்பற்ற அமைப்புக்கள் ஆகியவற்றுடன் ஒவ்வொரு தமிழனும் சிந்தித்து இளம் சமூகத்தினரை அழிவில் இருந்து மீட்க வேண்டும்.கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் முதல்வர் மீனலோஜினி இதயசிவதாஸ் தலைமையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடன் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் பச்சிலைப்பள்ளி பிரதேச தவிசாளர் சுரேன் அருட்தந்தை அருட்சகோதரிகள் ஆசிரியர்கள் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.