ஒரு வருடத்திற்குள் இனப் பிரச்சினைக்கான முழுமையான தீர்வு
இனப் பிரச்சினைக்கான முழுமையான தீர்வு புதிய அரசியலமைப்பின் ஊடாக ஒரு வருட காலத்திற்குள்ளே செய்து முடிக்கப்படும் என்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாக்குறுதியை தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவேற்கும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (25) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப் பிரச்சினைக்கான முழுமையான தீர்வு காண்பது தொடர்பான வேலை திட்டம் உடனடியாக நடைபெற வேண்டும். அதை ஜனாதிபதி முன்னெடுக்கின்ற போது எங்களுடைய முழுமையான இணக்கப்பாடும் முழுமையான ஆதரவும் அதற்கு இருக்கும் என்பதே எங்களுடைய உத்தியோகபூர்வ நிலைப்பாடாகும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமராக இருந்த காலப்பகுதியில் எவ்வளவு சேர்ந்து செயற்பட்டோம் என்பதை அவர் அறிவார். 2016 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து பாராளுமன்றம் அரசியலமைப்பு பேரவையாக மாற்றப்பட்ட காலத்தில் இருந்து ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து இதற்கான முன்னெடுப்புகள் வழிகாட்டல் குழு எல்லாம் அமைக்கப்பட்டது. அந்த வழிகாட்டக் குழுவிலே தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும் நானும் அங்கத்தவர்களாக இருந்திருக்கின்றோம் என்றும் கூறினார்.