கட்சியில் இணைந்தால் சூடான பிரியாணி
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி தலைவர் ஒருவர் தங்கள் கட்சியில் புதிதாக சேருபவர்களுக்கு பிரியாணி மற்றும் காலை உணவை வழங்கி வருகிறார். மத்தியபிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற அமைப்புகளுக்கான தேர்தலில், அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சி முதல்முறையாக போட்டியிட்டது. இந்த நிலையில், போபாலின் நரேலா சட்டமன்றத் தொகுதியில் கட்சியின் உறுப்பினர்களை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த வித்தியாசமான முயற்சியை முன்னெடுத்துள்ள ஏஐஎம்ஐஎம் தலைவர் பீர்சாதா தவுக்கீர் நிஜாமி கூறியதாவது:- பாஜகவாக இருந்தாலும் சரி, காங்கிரஸாக இருந்தாலும் சரி, கட்சிகளில் உரிய மரியாதை கிடைக்காதவர்களை நாங்கள் வரவேற்கிறோம். அவர்கள் எங்கள் அலுவலகத்திற்கு வரும்போது, மரியாதை நிமித்தமாக வீட்டில் உள்ள விருந்தினர்களுக்கு வழங்குவது போல், பிரியாணி வழங்குகிறோம் அல்லது அவர்களுக்கு காலை உணவான சமோசா மற்றும் தேநீர் வழங்குகிறோம். அவர்கள் சரியான இடத்திற்கு வந்துவிட்டதாக உணர வேண்டும். அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து அவற்றை தீர்த்து வைக்க முயற்சி செய்கிறேன். இந்த முயற்சியின் கீழ், இதுவரை 20,000க்கும் மேற்பட்டோர் எங்கள் கட்சியில் இணைந்துள்ளனர் என்றும் கூறினார்.