ஜனாதிபதியை பாராட்டினார் தேரர்
ஒரு ஜனநாயக தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 22வது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றியதன் மூலம், உலகிற்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாக செயல்பட்டுள்ளதாக ருஹுணு பல்கலைக்கழகத்தின் வேந்தர், கலாநிதி வணக்கத்திற்குரிய அக்குரெட்டியே நந்த தேரர் தெரிவித்துள்ளார்.
சேதவத்த, வேரகொட புராதன விகாரையின் கட்டின புண்ணிய நிகழ்வு இன்று (22) காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது. இங்கு உரையாற்றியபோதே நந்த தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு வழங்க, ஜனாதிபதி மேற்கொண்டிருக்கும் செயல்பாடானது நிச்சயமாக நாட்டின் அபிவிருத்திக்கு வழிவகுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விகாரையின் தலைவர் வணக்கத்திற்குரிய அம்பன்வெல ஞானலோக தேரரின் ஆலோசனைக்கு அமைய வருடாந்த கட்டின புண்ணிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கட்டின புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டதுடன், பிக்குகளுக்கு அன்னதானமும் வழங்கினார்.