அரிசி கையிருப்புக்களை பராமரிக்க முடியாத நிலை
பாதுகாப்பான அரிசி இருப்புகளை பராமரிக்க திறைசேரியிடம் இருந்து போதுமான ஒதுக்கீடுகள் கோரப்பட்டதாகவும், ஆனால் இதுவரை அது பெற்றுக் கொடுக்கப்படவில்லை என உணவு ஆணையாளர் திணைக்களம் கோபா குழு முன் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தேவையான அரிசி இருப்புக்களை பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உணவு ஆணையாளர் திணைக்களத்தினால் பாதுகாப்பான அரிசி கையிருப்பினை பராமரித்தல் மற்றும் சேமிப்பக பயன்பாடு குறித்த தணிக்கை அறிக்கையை ஆராய கோபா குழு, அதன் தலைவர் கபீர் ஹஷிம் எம்.பி தலைமையில் சமீபத்தில் கூடியது.
இதன்போது சராசரியாக 100,000 மெற்றிக் தொன் அரிசியை பராமரிப்பதற்கு வருடத்திற்கு சுமார் 22 பில்லியன் ரூபா தேவைப்படுவதாக தெரியவந்துள்ளது.
2,50,000 மெட்ரிக் தொன் சேமிக்கும் திறன் கொண்ட கிடங்கு வளாகத்தை அறிவியல் பூர்வமாக நவீனமயமாக்கிய போதிலும், அதன் அதிகபட்ச கொள்ளளவிற்கு சமமான இருப்புகளை சேமிக்க முடியவில்லை என உணவு ஆணையாளர் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.