யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் இருந்து விமான சேவை தொடர்பில் துறை சார்ந்த அமைச்சரின் கருத்து:
பலாலி விமானநிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்பட்டதன் பின்னர் சில இந்திய விமான நிறுவனங்கள், யாழுக்கான சேவைகளை முன்னெடுப்பதாக அறிவித்திருந்தன.எனினும், வான் போக்குவரத்து சார்ந்த தொழில்நுட்ப சிக்கல்கள் காரணம் காட்டி குறித்த நிறுவனங்கள் தொடர்ந்தும் அதனை பிற்போட்டுவருகின்றன.இந்த மாத இறுதிக்குள் சில விமானங்கள் யாழ் விமான நிலையத்துக்கு சேவையை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளன.நாட்டின் நிலைமைகருதி, இந்திய சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் இலங்கைக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.இந்த விமான நிலையத்தின் மேலதிக அபிவிருத்திக்காக இந்தியா அரசாங்கம் நிதியுதவி வழங்கியுள்ளது. தற்போது சிறிய விமானங்களை மாத்திரமே அங்கு தரையிறக்க முடியும்.அந்த நிதியில், பெரிய விமானங்களை தரையிறக்கக்கூடிய வகையில் ஓடு பாதைகளை விஸ்தரிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் கலந்துரையாடல் இடம்பெறுகிறது என்று விமான போக்குவரத்து அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.