ஒழுக்கம் காக்க மாணவர்களுக்கு தண்டனை: இரண்டு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு செலுத்த உத்தரவு.
அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறி, இரு மாணவர்களை கடுமையாக தண்டித்த பிரதி அதிபர் மற்றும் அரசுக்கு 2 இலட்சம் ரூபா நட்ட ஈடாக வழங்க உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.எடுத்துக்காட்டாக செயற்பட வேண்டிய பிரதி அதிபர் அரசியலமைப்பின் 11 வது சரத்தின் படி தனது அதிகாரங்களை மீறி உள்ளதாகவும், இரு மாணவர்களையும் மனிதாபிமானமற்ற முறையில் தண்டித்துள்ளதாகவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.2012 ஆம் ஆண்டு தொடரப்பட்ட இவ்வழக்கில் பிரதிவாதியாக பிரதி அதிபர் ஒருவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.இவ்வழக்கினை மாத்தளை மாவட்டத்தின் பல்லே பொல, அக்குரம்பொட வீர கெப்பெட்டிபொல மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் இருவர் ,பிரதி அதிபரால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானமற்ற தண்டனையை எதிர்த்து இந்த அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தனர்.பாடசாலை சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததற்கான பொறுப்பை மனுதாரர்கள் ஏற்றுக் கொண்டதன் மூலம், பாடசாலையில் ஒழுக்கம் பேணப்படவே தண்டனை வழங்கியதாக அதிபர் குறிப்பிட்டிருந்தார்.