எடப்பாடி பழனிசாமி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்: சட்டசபையில் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்
தமிழக சட்டசபையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பந்தமான தீர்மானம் தொடர்பாக உறுப்பினர்கள் பேசினார்கள். அப்போது முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஆணையம் கூறி உள்ளது. அதனையும் இந்த அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவலர் முதல் ஐ.ஜி. வரையிலான உயர் அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும். அப்போது முதல்-அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈசுவரன் ( கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி) தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் யார் மீதெல்லாம் சந்தேகம் உள்ளது என்பது தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தெளிவாக எழுதி கொடுத்து உள்ளார்.
மனிதாபிமானற்ற முறையில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அனைவரையும் விசாரித்து உரிய தண்டனை வழங்க வேண்டும். எதிர் காலத்தில் இப்படி ஒரு சம்பவம் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி) தூத்துக்குடியில் ஜாலியன் வாலாபாக் என்று கூறப்படும் அளவுக்கு நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். டி.ஐ.ஜி. முதல் உயர் அதிகாரிகள் வரை குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. அனைவரையும் விசாரித்து உரிய தண்டனை வழங்க வேண்டும். அப்போது இருந்த டி.ஜி.பி. தலைமை செயலாளர் ஆகியோர் அன்றைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உரிய தகவல்கள் தெரிவித்து இருப்பார்கள். ஆனால் அவர் துப்பாக்கி சூடு சம்பவம் எனக்கு தெரியாது என அப்போது தெரிவித்தார்.