2 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கைனுடன் 6 பேர் கைது
சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான ´கொக்கைன்´ போதைப் பொருளுடன் மன்னாரை சேர்ந்த நபர் உள்ளடங்களாக 6 சந்தேக நபர்களை மன்னார் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், மன்னார் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பிரகாரம் புத்தளம் நுரைச்சோலை பகுதிக்கு கடந்த திங்கட்கிழமை (17) தேடுதல் நடவடிக்கைக்காக சென்றிருந்த மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் சுமார் 2 கோடி ரூபாய் பெறுமதியான கொக்கைன் போதை பொருளை மீட்டனர்.
1 கிலோ 26 கிராம் கொக்கைன் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் புத்தளம் மற்றும் கல்பிட்டியினை சேர்ந்த 25, 26, 34, 36, 53 வயதுடைய 5 சந்தேகங்களையும் கைது செய்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணையில் நானாட்டான பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள அருகண்குண்டு பகுதியினைச் சேர்ந்த 48 வயதுடைய ஒருவரின் வீட்டில் இருந்து கொக்கேன் வகை போதைப்பொருள் 506 கிராம் கைப்பற்றப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் துல்சான் நாகாவத்த வின் பணிப்பில், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பிரபாத் விதானகே, மன்னார் மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொ.ப. ரத்னாயக தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்படி கொக்கேன் போதை பொருளினை கைப்பற்றியும், அதனை உடைமையில் வைத்திருந்த சந்தேகநபர்களையும் கைது செய்துள்ளனர்.