யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் விலங்கு விஞ்ஞானத் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட "வில்வம் பழச்சாறு கலந்த பருகும் யோகட்" பானத்தில் அறிமுக நிகழ்வு நேற்றுப் புதன்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது.
விவசாய பீடத்தின் விலங்கு விஞ்ஞானத் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, சேதன முறையில் உற்பத்தி செய்யப்படக் கூடிய வில்வம் பழச்சாறு கலந்த பருகும் யோகட்டுக்கான உற்பத்தி ஒப்பந்தம் கடந்த வருடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக இணைப்பு அலுவலகத்தின் அனுசரணையுடன் முல்லைத்தீவில் அமைந்துள்ள முல்லை பாற்பொருள் உற்பத்தி நிலையத்துடன் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அந்த ஒப்பந்தத்துக்கமைய உற்பத்தி செய்யப்பட்டட வில்வம் பழச்சாறு கலந்த பருகும் யோகட்டை சந்தைப்படுத்தும் செயன்முறை நேற்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.இந்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, முல்லை பாற்பொருள் உற்பத்தி நிலையத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர், ஜெய்கா செயற்றிட்ட அதிகாரிகள், விவசாய பீட அதிகாரிகள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக இணைப்பு அலுவலகத்தின் பணிப்பாளர், பல்கலைக்கழகப் பணியாளர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.