விரைவில் ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும் - சாணக்கியன்
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக அரசாங்கம் தொடர்ந்தும் அடக்குமுறைகளை மேற்கொண்டால், விரைவிலேயே ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் நேற்று (04) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “xcl technologies lanka (pvt) ltd என்ற நிறுவனம் கடந்த 12 வருடங்களில் 5 ஆயிரத்து 325 ஊழியர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளனர். இது நாட்டிற்கு நல்லதொரு விடயம் தான்.
எனினும் வெளிமாவட்டங்களிலிருந்து குறிப்பாக மன்னார், யாழ்ப்பாணம் என வெளியிடங்களிலிருந்து வருகை தந்து இந்த நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் கொழும்பில் தங்களது அன்றாட வாழ்க்கையினை கொண்டு செல்வதில் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.
ஏனெனில் குறித்த ஊழியர்களுக்கு குறைந்த அளவிலேயே சம்பளம் வழங்கப்படுகின்றது. எனினும் தங்குமிடம், உணவு என ஊழியர்கள் அதிகளவில் பணத்தினை செலவழிக்கின்றனர். இதனால் குறைந்தளவான பணமே அவர்களிடம் எஞ்சியுள்ளது.
எனவே, கொழும்பிற்கு வெளியேயும் குறித்த நிறுவனம் தங்களது அலுவலங்களை திறந்தால், அவர்களின் வியாபாரம் விருத்தியடையும் என்பதுடன், நாடும் நன்மையடையும், ஊழியர்களும் நன்மையடைவார்கள்.
முகநூலில் கருத்து வெளியிட்டார்கள் என்றுக்கூட சில இளைஞர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இவ்வாறு இளம் தலைமுறையினரை கைது செய்ய என்ன காரணம்? இவர்கள் செய்த பயங்கரவாதச் செயற்பாடுகள் என்ன? இவ்வாறான செயற்பாடுகளை அரசாங்கம் தொடர்ச்சியாக மேற்கொண்டால் நிச்சயமாக விரைவிலேயே ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும்.’ எனத் தெரிவித்துள்ளார்.