தேசிய சபையின் கன்னிக் கூட்டத்தில் விசேட தீர்மானங்கள்
ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற ´தேசிய சபையின்´ கன்னிக் கூட்டத்தில் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான இரண்டு உப குழுக்களை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால தேசிய கொள்கைகளை உருவாக்குவது தொடர்பாக பாராளுமன்றத்தின் பொதுவான முன்னுரிமைகளை தீர்மானிப்பது மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால பொதுவான குறைந்தபட்ச திட்டங்கள் தொடர்பான உடன்பாட்டை எட்டுவதற்காக இந்த உப குழுக்களை அமைக்க தீர்மானிக்கப்ட்டுள்ளது.
தேசிய சபையின் முதலாவது கூட்டம் இன்று (29) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்றது.
இதில் பிரதமர் தினேஷ் குணவர்தன, சபைத் தலைவர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல, அசங்க நவரத்ன, ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், மனோ கணேசன், பழனி திகாம்பரம், ஜீவன் தொண்டமான், சிசிர ஜயக்கொடி, நாமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சாகர காரியவசம், அலி சப்ரி ரஹீம், ரோஹித அபேகுணவர்தன, வஜிர அபேவர்தன, அமைச்சர் டிரான் அலஸ், சிவனேஷ்துரை சந்திரகாந்தன், சம்பிக்க ரணவக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.