ராணி எலிசபெத் உடலுக்கு 10 லட்சம் பேர் அஞ்சலி
உலக நாடுகளின் பார்வையை கடந்த 12 நாட்களாக தன்பக்கம் ஈர்த்திருந்தது, இங்கிலாந்து. ராணி எலிசபெத் மறைவு அந்த நாட்டின் நீண்ட கால ராணியாகவும், காமன்வெல்த் நாடுகளின் தலைவராகவும் 70 ஆண்டுகளாக பதவி வகித்து வந்த இரண்டாம் எலிசபெத் (வயது 96), கடந்த 8-ந்தேதி ஸ்காட்லாந்தின் பால்மோரல் கோட்டையில் காலமானார். பல்லாண்டுகளாக மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றிருந்த ராணியின் மறைவு, இங்கிலாந்து மட்டுமின்றி உலக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. ராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து அவரது மூத்த மகன் சார்லஸ் (73) மன்னர் ஆனார். பொதுமக்கள் அஞ்சலி ஸ்காட்லாந்தில் இருந்து லண்டன் கொண்டு வரப்பட்ட ராணி எலிசபெத்தின் உடல், பக்கிங்ஹாம் அரண்மனையில் அரச குடும்பத்தினரின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் கடந்த 14-ந் தேதி மாலை முதல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ராணியின் உடல் வைக்கப்பட்ட சவப்பெட்டியின் மீது கிரீடமும், செங்கோலும் வைக்கப்பட்டன.
பக்கிங்ஹாம் அரண்மனையில் மட்டுமின்றி தங்கள் நெஞ்சங்களிலும் பல்லாண்டுகளாக ராணியாக வீற்றிருந்த தங்கள் மகாராணிக்குலட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடந்த 4 நாட்களாக நீண்ட வரிசையில் காத்திருந்து கண்ணீர் அஞ்சலி செலுத்திய நாட்டு மக்களின் பற்றுறுதி அரச குடும்பத்தினரை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.
அதன்படி ராணியின் உடல் வைக்கப்பட்டிருந்த மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டி குதிரைகள் பூட்டப்பட்ட பீரங்கி வண்டியில் வைத்து வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்துக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. இங்கிலாந்து படை வீரர்களின் பேண்டு வாத்தியங்கள் முழங்க இந்த இறுதி ஊர்வலம் நடந்தது. ராணியின் உடலுடன் மன்னர் சார்லஸ் மற்றும் இளவரசர்கள் வில்லியம், ஹாரி, ராணியின் பிற பிள்ளைகளான ஆனி, ஆண்ட்ரூ, எட்வர்ட் மற்றும் அரச குடும்பத்தினரும் உடன் சென்றனர். இளவரசர் வில்லியமின் குழந்தைகளும், அரச குடும்பத்தின் இளைய வாரிசுகளுமான 9 வயதான இளவரசர் ஜார்ஜ், 7 வயதான இளவரசி சார்லோட்டும் கொள்ளுப்பாட்டியின் உடலுடன் நடந்து சென்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
பின்னர் தேவாலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. தேவாலய டீன் டேவிட் ஹோயல், கேன்டர்பெர்ரி பேராயர் ஜஸ்டின் வெல்பி ஆகியோர் இந்த சிறப்பு வழிபாட்டை நடத்தினர்.
இறுதியில் அங்கு ராணியின் கணவர் பிலிப்பின் கல்லறை அருகே ராணி எலிசபெத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.