தைவானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை
தைவானில் யுஜிங்கிலிருந்து கிழக்கே 85 கிமீ தொலைவில் இன்று பிற்பகல் 12:14 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரங்கள் ஏதும் வெளிவரவில்லை. இதுகுறித்து தைவான் ஊடகம் கூறுகையில், நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கியதாகவும், சாலைகள், பாலங்கள் பெரிதும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. உயிர்ச்சேதம் ஏற்பட்டதா என்பது தெரியவில்லை என்றும் தெரிவித்து உள்ளது.
தைவான் கடற்கரையில் நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிமீ (190 மைல்) தொலைவில் அபாயகரமான சுனாமி அலைகள் எழக்கூடும் என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஒகினாவா மாகாணத்தில் உள்ள கடற்கரை பகுதியில் 1 மீட்டர் உயரத்தில் சுனாமி அலைகள் வரலாம் என ஜப்பான் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.