நிலவும் சீரற்ற காலநிலை - 20 மாவட்டங்களில் 80, 642 குடும்பங்களைச் சேர்ந்த 276, 550 பேர் பாதிப்பு
நிலவும் சீரற்ற காலநிலையை அடுத்து 20 மாவட்டங்களில் 80, 642 குடும்பங்களைச் சேர்ந்த 276, 550 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இதுவரையில் 5 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் 5 பேர் காணாமல் போயுள்ளனர். 9 பேர் காயமடைந்துள்ளதாகக் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேநேரம், 16 வீடுகள் முழுமையாகச் சேதமடைந்துள்ளதுடன் 882 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
அத்துடன் 5, 305 குடும்பங்களைச் சேர்ந்த 16, 553 பேர் தங்களது இருப்பிடங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
அவர்கள் 183 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தரவுகளுக்கு அமைய, கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலேயே அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் 50, 164 குடும்பங்களைச் சேர்ந்த 173 034 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாகக் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் மாத்திரம் 43, 507 குடும்பங்களைச் சேர்ந்த 152, 603 பேர் பாதிப்படைந்துள்ளனர்.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் 13, 922 பேரும் திருகோணமலை மாவட்டத்தில் 6, 509 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வட மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் 15, 205 குடும்பங்களைச் சேர்ந்த 52, 487 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 9, 642 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 4, 287 பேரும், முல்லைத்தீவில் 5, 524 பேரும் வவுனியாவில் 3, 542 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் 5, 303 குடும்பங்களைச் சேர்ந்த 16, 919 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் பதுளை மாவட்டத்தில் 707 குடும்பங்களைச் சேர்ந்த 2, 727 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நுவரெலியா மாவட்டத்தில் 150 குடும்பங்களைச் சேர்ந்த 546 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
000