தமிழகத்தை உலுக்கும் இன்புளுவென்சா காய்ச்சல்! – கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்
தமிழ்நாட்டில் தற்போது அதிகமான அளவில் மழை பெய்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் காய்ச்சல், சளி போன்றவற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னை எழும்பூர் மருத்துவமனையில் சமீபமாக 100க்கும் அதிகமான குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை மட்டுமல்லாது, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் இன்புளுவென்சா காய்ச்சல் பரவி வருகிறது. இதுவரை தமிழகத்தில் 282 குழந்தைகள் இன்புளுவென்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இன்புளுவென்சா காய்ச்சல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதாரத்துறை அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளது. அதில், திடீர் வறட்டு இருமல், தலைவலி, தொண்டை வலி, மூக்கு அடைப்பு, உடல்வலி, உடல் சோர்வு ஆகியவை இன்புளுவென்சா காய்ச்சலில் அறிகுறிகள் என கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வரும் மக்களுக்கு காய்ச்சலுக்கான சிகிச்சை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
லேசான அறிகுறி உள்ளவர்களை 48 மணி நேரம் மருத்துவ கண்காணிப்பில் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், 5 வயதிற்கு உட்பட்ட பச்சிளம் குழந்தைகள், நீரிழிவு நோய் உள்ளவர்கள் உள்ளிட்டோருக்கு எளிதில் நோய் தொற்றும் அபாயம் உள்ளதால் அறிகுறிகள் கண்டறியப்பட்டால் உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்கவும், தேவையான மருந்துகளை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.