ரஷியா கைப்பற்றிய 6 ஆயிரம் சதுர கி.மீ. பகுதிகள் மீட்பு: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில், ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா தொடங்கிய போரானது 6 மாதங்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. போரில் உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்றும் ரஷிய படைகளின் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து, ரஷிய படைகள் கிழக்கு உக்ரைனை தாக்க தொடங்கின. ஏற்கனவே கிழக்கு உக்ரைனின் பெரும்பாலான பகுதிகள் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்த நிலையில், உக்ரைன் வசம் இருந்த பல நகரங்களை ரஷியா கைப்பற்றியது. அணு உலைகளையும் இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தியது. இதில், முக்கிய மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நகரங்கள் இருளில் மூழ்கும் சூழல் ஏற்பட்டது. எனினும், பின்னர் அது சரி செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ரஷியா கைப்பற்றிய 6 ஆயிரம் சதுர கி.மீ. (2,320 சதுர மைல்கள்) பகுதிகள் மீட்கப்பட்டு உள்ளன என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். ஜெலன்ஸ்கி கூறும்போது, வடகிழக்கு பகுதியில் உக்ரைனின் படைகள் ரஷியாவை எதிர்த்து தீவிரமுடன் போரிட்டு வருகின்றன. அந்த பகுதியில் இழந்த இடங்களை பெருமளவில் மீட்டு வருகின்றன. செப்டம்பர் தொடக்கத்தில் இருந்து கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் 6 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவை முன்பே எங்களுடைய படைகள் மீட்டெடுத்து உள்ளன. தொடர்ந்து நாங்கள் முன்னேறி வருகிறோம். இந்த நடவடிக்கையில் ரஷிய படை வீரர்கள் பலர் சிறை பிடிக்கப்பட்டு உள்ளனர். ரஷியாவுக்கு சரியான பதிலடியும் கொடுக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு எல்லையில் எங்களது படைகள் அனைத்து வழிகளிலும் முன்னேறி வருகின்றன என கூறியுள்ளார்.
போர் கைதிகள் அதிகளவில் உள்ளனர் என்றும் அவர்களை தங்க வைக்க போதிய இடமில்லாத சூழல் உள்ளது என்றும் உக்ரைனிய அதிபரின் ஆலோசகர் ஒருவர் கூறியுள்ளார்.