பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து ஜனாதிபதி கருத்து
இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முழுமையான ஆதரவை வழங்க அமெரிக்கா அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்தின் நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.
இரு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வந்துள்ள சமந்தா பவர், இன்று (11) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை, ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தற்போதைய அவசரநிலையால் இலங்கை மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தும் இந்த நிலையில் இருந்து மீள்வதற்கு அமெரிக்கா எவ்வாறு ஒத்துழைப்பு வழங்க முடியும் என்பது குறித்தும் சமந்தா பவர் இதன்போது கலந்துரையாடினார்.
அத்துடன், இலங்கையின், பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அமெரிக்கா வழங்கும் நீடித்த ஆதரவு குறித்தும் சமந்தா பவர் இதன்போது கலந்துரையாடினார்.
ஜனநாயகத்தை பலப்படுத்த எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து பவருக்கு விளக்கமளித்த ஜனாதிபதி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பை பெறுவது தொடர்பிலும் எடுத்துரைத்தார்.
அத்துடன் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் தேவைப்படின் சர்வஜனவாக்கெடுப்பை நடத்தவும் தான் தயங்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டினார்.