இந்தோனேஷியாவில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேஷியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணமாக மேற்கு பபுவா மாகாணம் உள்ளது. இங்குள்ள மத்திய மம்பெரமோ மாவட்டத்தில் இன்று அதிகாலை அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கியதால், அச்சம் அடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். இந்த நிலநடுக்கம் 6.2 மற்றும் 5.5 ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக இந்தோனோஷிய நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.
இரண்டு நிலநடுக்கங்களும் 15 கிலோமீட்டர் (9.3 மைல்) ஆழத்தில் அபேபுரா நகரத்திலிருந்து 272 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்ட விவரம் எதுவும் தெரியவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை. இந்தோனேஷியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையாகி விட்டது. கடந்த பிப்ரவரி மாதம் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 25 பேர் இறந்தனர். இதேபோல் கடந்த ஆண்டு மேற்கு சுலாவேசி மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 100 பேர் பலியானார்கள். 6,500 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.