பிரதமரின் 'காசநோய் இல்லாத இந்தியா' திட்டத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார்
டெல்லியில் கடந்த 2018 மார்ச் மாதம் நடைபெற்ற காசநோய் ஒழிப்பு உச்சிமாநாட்டின் போது 2025-ம் ஆண்டிற்குள் காசநோயை முற்றிலுமாக ஒழிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இந்நிலையில் இந்த இலக்கை எட்டுவதற்கு 'காசநோய் இல்லாத இந்தியா' எனும் திட்டத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது, பிரதமரின் 'காசநோய் இல்லாத இந்தியா' திட்டத்திற்கு இந்திய குடிமக்கள் அனைவரும் அதிக அளவில் முன்னுரிமை அளித்து பேரியக்கமாக மாற்ற வேண்டும். நம் நாட்டில் காசநோய் மூலமே அதிக இறப்பு எண்ணிக்கை உள்ளது. உலக மக்கள் தொகையில் இந்தியாவின் பங்கு 20 சதவீதம். ஆனால் உலக அளவில் காசநோய்க்கு 25 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதமரின் 'காசநோய் இல்லாத இந்தியா' திட்டத்தின் கீழ், வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் இருந்து காசநோயை முற்றிலுமாக அகற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.