இரண்டாவது போராட்டத்தை ஆரம்பிப்போம் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
இளைஞர்கள் முன்னெடுத்த முதலாவது போராட்டம் முடிந்துவிட்டதாகவும் நாட்டை கட்டியெழுப்புவதற்கான இரண்டாவது போராட்டத்தை இங்கிருந்து ஆரம்பிப்போம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை உருவாக்க புதிதாக சட்டம் தயாரிக்க உத்தேசித்திருப்பதாகவும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் ஒன்றை கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
இந்தப் பணியில் அனைத்து தரப்பினரையும் பேதமின்றி இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, சக்தி வாய்ந்த நாட்டைக் கட்டியெழுப்பும் தேவை, தனது சொந்த நலனுக்கு அன்றி, அடுத்த தலைமுறைக்காகவே கட்டியெழுப்ப வேண்டும் என்றும் குறிப்பிட்டார். கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்று (06) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் 76ஆவது ஆண்டு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய ஜனாதிபதி, அடுத்த 25 வருடங்களில் கடனற்ற சக்திவாய்ந்த இலங்கையை உருவாக்குவதற்கு வலுவான கொள்கை கட்டமைப்பின் ஊடாக செயற்பட வேண்டும் என்றும் கூறினார்.
இந்த வேலைத்திட்டம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாறாத பலமான கொள்கை கட்டமைப்பாக செயற்படுத்தப்பட வேண்டும் என்றும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் ஒன்றை கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் அத்துடன், உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை உருவாக்க புதிதாக சட்டம் தயாரிக்க உத்தேசித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.