எம்மால் நிரந்தர தீர்வு வழங்க முடியும்
நாட்டில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு எம்மால் நிரந்தர தீர்வு வழங்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (7) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “இளம் தரப்பினர் கிரிகெட் விளையாட்டை சிறந்த முறையில் முன்னோக்கி கொண்டு செல்கிறார்கள். ஆசிய கிண்ண கிரிகெட் போட்டியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணிக்கு வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.
அரசியலலையும் இளம் தரப்பினரிடம் ஒப்படைக்குமாறு நாட்டு மக்களிடம் மீண்டும் வலியுறுத்துகிறேன். மந்த போசணை தொடர்பிலான சபை ஒத்தி வைப்பு விவாதத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் நிலைமை தொடர்பில் அவதானம் செலுத்தவுள்ளேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 வயதிற்கு குறைவான 55 ஆயிரம் பிள்ளைகள் உள்ளார்கள். இந்த எண்ணிக்கையில் 10 சதவீதமானோர் மந்தபோசணை அல்லது ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரிகள் அறிக்கையிட்டுள்ளனர்.
அதற்கு மேலதிகமாக 11 ஆயிரம் கர்ப்பிணி தாய்மார்கள் உள்ளார்கள். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நூற்றுக்கு 10 சதவீதமாக காணப்பட்ட மந்த போசணை அல்லது ஊட்டச்சத்து குறைப்பாடு 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதமளவில் 17 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.
எமது மாவட்டத்தை பொறுத்தவரை கர்ப்பிணி தாய்மாரின் உரிய காலத்திற்கு தேவையான நிறை குறைவடைந்துள்ளதாக மாவட்ட சுகாதார அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சாபகேடு. மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.
பாடசாலைகளும் இராணுவம் வசமுள்ளது. கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் பிரச்சினை தோற்றம் பெற்றுள்ளது. இவ்வாறான நிலையில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் கட்சி மாநாட்டிற்கு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை மட்டக்களப்புக்கு வரவேற்றுள்ளார்.
தனது சொந்த மாவட்டத்திற்கு செல்ல முடியாத நிலையில் நாமல் ராஜபக்ஷ உள்ளார். அவ்வாறிருக்கையில் நாமல் ராஜபக்ஷவை மேடைக்கேற்றி மட்டக்களப்பு மாவட்ட மக்களை தரம் குறைத்துள்ள சந்திரகாந்தனை சபையில் வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு இல்லாமலிருந்திருந்தால் அம்பாறை மாவட்டத்திற்கு ஒரு தமிழ் பிரதிநிதித்துவம் கூட கிடைத்திருக்காது. கல்முனை பிரதேச செயலக பிரிவு குறித்து விரிவுப்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தையை முன்னெடுப்போம் எனத் தெரிவித்துள்ளார்.