அரசாங்க நிதி பற்றிய குழு வழங்கிய அனுமதி
பெருந்தோட்டத் துறையில் களை கொல்லியாகப் பயன்படுத்தப்படும் கிளைபோசேட்டை இறக்குமதி செய்வது தொடர்பில் 1969ஆம் ஆண்டு 01ஆம் இலக்க ஏற்றுமதி இறக்குமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் அரசாங்க நிதி பற்றிய குழுவில் கவனத்தில் கொள்ளப்பட்டதுடன், நீண்ட கலந்துரையாடலுக்குப் பின்னர் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது.
அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) ஹர்ஷ.த சில்வா தலைமையிலான குழு அண்மையில் (02) கூடியபோதே இந்த அனுமதி வழங்கப்பட்டது.
இதற்கமைய இந்த ஒழுங்குவிதிகள் அடங்கிய 2291/44ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நாளையதினம் (06) அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய பூச்சிகொல்லிகள் பதிவாளர் நாயகத்தின் பரிந்துரையின் கீழ் கிளைபோசேட் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படவுள்ளது.
இந்த ஒழுங்குவிதிக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டாலும், அது நிபந்தனைக்கு உட்பட்டதாகவே வழங்கப்படுகிறது என இக்குழுவின் தலைவர் தெரிவித்தார். இதற்கு முன்னர் அரசாங்க நிதி பற்றிய குழுவின் பரிந்துரைக்கு அமைய இலங்கையின் பெருந்தோட்டப் பயிர்கள் தொடர்பில் இந்த கிளைபோசேட் பயன்பாடு குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் அதிகாரிகளுடன் கலந்துரையடலை அடுத்துத் தயாரிக்கப்பட்ட அறிக்கை தொடர்பில் விரிவான கலந்துரையாடலொன்றை நடத்திய பின்னர் எதிர்கால தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.