வைத்திய துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி மாற்றம்
நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய்வதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் அறிக்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களிடம் நேற்று (3) ஜனாதிபதி அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கும் ஜனாதிபதி அவர்களுக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற விசேட சந்திப்பின் போது இந்த அறிக்கை கையளிக்கப்பட்டதுடன், சுகாதாரத்துறை மற்றும் வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
மருந்துத் தட்டுப்பாடு மற்றும் மருந்துப் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களைப் போக்குவதற்கான அவசர பொறிமுறைமை ஒன்றின் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மருந்துகள் உட்பட சுகாதாரத் துறையின் ஏனைய தேவைகள் பற்றி, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார்.