மத்திய வங்கி ஆளுநருக்கு எதிரான சதித்திட்டம் குறித்து வௌிப்படுத்திய சஜித்
இன்று மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து மத்திய வங்கி ஆளுநருக்கு எதிரான சதித்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும், மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு நண்பர் ஒருவரை நியமிப்பதற்காகவே அது இடம்பெறுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
சிலர் தற்போதைய மத்திய வங்கி ஆளுநரின் குடியுரிமை குறித்து கேள்வி எழுப்புகின்றனர் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், வரலாற்றில் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களை மத்திய வங்கியின் ஆளுநராக நியமித்தது யார் என்பது நாட்டுக்கே தெரியும் எனவும் அவர் தெரிவித்தார்.
மத்திய வங்கியின் ஆளுநர் திருமணத்திற்குச் செல்வதாகக் கூறி நாட்டை விட்டு வெளியேறியதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அவரை இன்று வரை நாட்டுக்கு அழைத்து வர முடியவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மத்திய வங்கி ஆளுநருக்கு எதிரான சதித்திட்டத்தின் அடுத்த கட்டமாக நாட்டை விட்டு தப்பிச் சென்ற மத்திய வங்கி ஆளுநரை அழைத்து வந்து மத்திய வங்கியை கையளிப்பதா என்ற சந்தேகம் தமக்கு இருப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அதுமட்டுமின்றி, எவ்வளவோ தொகை வேண்டுமானாலும் பணம் அச்சடித்தாலும் பணவீக்கம் உயராது என்று தன்னிச்சையாகச் செயல்பட்ட மத்திய வங்கி ஆளுநர் ஒருவர் இந்நாட்டில் இருந்ததை நாம் மறந்துவிடக் கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.