இந்நாடு இன்று சுவிட்சர்லாந்தை விட முன்னேறி இருக்க வேண்டும் - மனோ கணேசன்
2001ம் வருடத்தில் இருந்து நான் இந்த பாராளுமன்றில் இருக்கிறேன். இரு தசாப்தங்களாக எத்தனையோ நிதி அமைச்சர்களின் வீர தீர பிரகடனங்களையும், வரவு செலவு திட்ட உரைகளையும் கேட்டு சலித்து போயுள்ளேன். ஒவ்வொரு வருடமும் இவர்கள் கூறும் சுந்தர கதைகள் உண்மையாகி இருக்குமானால், இந்நாடு இன்று சுவிட்சர்லாந்தை விட முன்னேறி இருக்க வேண்டும். ஆசியாவின் சொர்க்கபுரி ஆகி இருக்க வேண்டும். ஒன்றும் நடக்க வில்லையே. “ரிவர்ஸ் கியரில்” அல்லவா பின்னோக்கி போகிறோம்? ஆசியாவில் பின்னோக்கி போய், இன்று ஆபிரிக்க மட்டத்தில் இருக்கிறோம்.
ஆகவே, நிதி அமைச்சரின் உரையின் 19ம் அத்தியாயம் பற்றி மட்டும் வெகுவாக நான் உரையாட விரும்புகிறேன். அது “சமூக நலன்புரி” என்பதாகும். சமுக நலன்புரி கொடுப்பனவுகள் பெறுகின்ற பெயர் பட்டியலில், தோட்ட தொழிலாளர்களும், கொழும்பு நகர பாமர மக்களுக்கும் இடம்பெற வேண்டும். இதை நாம் கண்காணிப்போம்.
கடந்த எமது நல்லாட்சி அரசின் போது, நாம் அதற்கு முந்தைய ராஜபக்ச அரசின் ஊழல் பேர்வழிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தோம். இந்த ஆட்சி வந்ததும் அந்த வழக்குகள் பற்றி ஒரு ஆணைக்குழு அமைத்தீர்கள். அந்த ஆணைக்குழு இவர்களை நிபராதிகள் என அறிக்கை தந்தது. அதை அடிப்படையாக கொண்டு சட்ட மாதிபர் அந்த வழக்குகளை வாபஸ் வாங்கினார். எனவே இந்த வழக்குகள் விசாரிக்கப்பட்டு, சாட்சிகள் அழைக்கப்பட்டு, அவர்கள் எவரும் வழக்குகளில் இருந்து விடுவிக்கப்படவில்லை. இதை தெளிவாக அறிந்துக்கொள்ளுங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் கொழும்பு மாவட்ட எம்பி மனோ கணேசன் இன்று இடைக்கால பாதீடு விவாதத்தில் உரையாடும் பொழுது கூறினார்.