கொரோனா தொற்று பரவல் குறித்தும் அதனை தடுப்பது குறித்தும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் விசேட அறிக்கை
விசேட அறிக்கையில், கொரோனா தொற்று தற்போது இலங்கை முழுவதும் பரவி வருகின்றது. அந்த வகையில் யாழ் மாவட்டத்திலும் கொரோனா தொற்றாளர்கள் அதிகமாக இனங்காணப்பட்டுள்ளனர். அத்துடன் இரண்டு கொரோனா மரணங்களும் யூலை மாதத்தில் நிகழ்ந்துள்ளன. எனவே, இந்நிலைமையானது கொரோனா பெருந்தொற்றாக மாறுவதற்குரிய ஆபத்து நிலைமை காணப்படுகின்றது.அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படின் முன்பு போன்றே கொரோனா இறப்புக்கள் பெருமளவு ஏற்படும். இந்நிலையில் எம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு எமக்கு முன்னால் உள்ள தெரிவுகள் மிகச்சிலவே.அவையாவன1. மக்கள் அதிகளவு கூடும் இடங்களில் பொதுச் சுகாதார நடைமுறைகளான முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணல், சரியான முறையில் கைகளைக் கழுவுதல் என்பவற்றைக் கடைப்பிடித்தல்.2. தடுப்பூசியை 20 வயதுக்கு மேற்பட்ட அனைவரிற்கும் பெற்றுக் கொடுத்தல். தடுப்பூசியினை இதுவரை பெற்றுக் கொள்ளாதவர்களும் மற்றும் மூன்றாவது அல்லது நான்காவது தடவை பெற்றுக்கொள்ளாதவர்களும் உடனடியாக அதனைப் பெற்றுக்கொள்ள வேண்டும். முக்கியமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களும் வேறு நீண்டகால நோய் நிலைமைகளினால் பாதிக்கப்பட்டவர்களும் தமது நான்கு தடுப்பூசிகளையும் பெற்றிருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.
இத் தடுப்பூசிகள் வழங்கப்படும் நிலையங்கள் மற்றும் திகதிகள் தொடர்பாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளுக்கு அழைப்பதன் மூலம் மக்கள் தெரிந்து கொள்ளலாம்.மேலும், வடமாகாணத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் திங்கள், புதனும்தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் செவ்வாய், வெள்ளியும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் செவ்வாய், வியாழனும் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் செவ்வாயும்முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் செவ்வாய், புதனும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் செவ்வாய், வியாழனும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் புதன்,சனியும் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை திங்கள்,செவ்வாய், புதனும் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும்.
பொதுமக்கள் மூன்றாவது மற்றும் நான்காவது தடவை தடுப்பூசியினை பெற்றுக் கொள்வதற்கு செல்லும்போது முதலில் தடுப்பூசி பெற்றுக் கொண்டமையினை உறுதிப்படுத்துவதற்காக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் வழங்கப்பட்ட அட்டையினை எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
எனவே, மக்கள் அனைவரையும் அச்சமின்றி தமக்கென அறிவிக்கப்பட்ட நாட்களில் உரிய இடத்திற்கு சென்று தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.கொரோனா தொற்று நோய்க்கெதிரான தடுப்பூசியைக் பெற்றுக் கொள்வது உங்களையும் உங்களுக்கு பிரியமானவர்களையும் இக் கொரோனா தொற்றுநோயிலிருந்து பாதுகாப்பதுடன் எமது சமூகத்தையும் பாதுகாப்பதாக அமையும் என்றுள்ளது.