
எரிபொருளை முறையாக விநியோகிக்க ஏற்பாடு செய்க
நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு தற்போது கிடைத்துள்ள மற்றும் அடுத்த சில நாட்களுக்குள் பெறப்படவுள்ள எரிபொருள் கையிருப்புக்களை நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முறையாக விநியோகிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
நிதி அமைச்சும் மத்திய வங்கியும் அரச மற்றும் தனியார் வங்கிகளுடன் இணைந்து போதியளவு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு வசதியாக கடன் கடிதங்களை வழங்குவதற்கான திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
பெற்றோல், டீசல் மற்றும் எரிவாயு விநியோகம் மற்றும் இறக்குமதி தொடர்பில் நேற்று (17) முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வழங்குனர்களுடனான நீண்ட கால எரிபொருள் விநியோக ஒப்பந்தங்களில் ஈடுபடுவதற்கான சாத்தியம் குறித்து சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது. எரிபொருள் விநியோகத்தில் பொதுப் போக்குவரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களைப் பயன்படுத்தி, தனியார் மற்றும் சுற்றுலா பேரூந்துகள் மற்றும் பாடசாலை வாகனங்களுக்கு பொலிஸாரின் மேற்பார்வையின் கீழ் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
ஏனைய அத்தியாவசிய சேவைகளுக்காக அடையாளம் காணப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களின் மூலம் தொடர்ந்தும் எரிபொருளை விநியோகிக்கவும், இராணுவம் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பாதுகாப்பை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது. தேவையில்லாமல் எரிபொருளை பதுக்கி வைப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமல்படுத்தவும் பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிடப்பட்டது.