இளைஞர்களுக்கு பொன்னான வாய்ப்பை அளிக்கிறது அக்னி பாதை திட்டம்: ராஜ்நாத் சிங்
இளைஞர்கள் ஆயுதப்படையில் சேர்ந்து தாய்நாட்டுக்கு சேவை செய்ய அக்னி பாதை திட்டம் பொன்னான வாய்ப்பை அளித்துள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தில் வயது தளர்வு அறிவித்திருப்பது இளைஞர்கள் மீது அரசுக்கு உள்ள அக்கறையை வெளிப்படுத்துகிறது என்றும் அவர் கூறியுள்ளார். நாடு முழுவதும் அக்னி பாதை திட்டத்துக்கு எதிராக இளைஞர்களின் போராட்டம் வலுத்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இவ்வாறு தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.
இரண்டு நாள் பயணமாக ஜம்மு - காஷ்மீர் சென்றுள்ள அவர், “கடந்த இரண்டு ஆண்டுகள், கொரோனா காரணமாக ஆள்சேர்ப்பு பணிகள் நடைபெறாததால், இளைஞர்கள் ராணுவத்தில் சேர வாய்ப்புக் கிடைக்கவில்லை . இளைஞர்களுடைய எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின்படி, 2022-ம் ஆண்டில் அக்னி பாதை திட்டத்தின்கீழ், ராணுவத்தில் சேருவதற்கான வயது வரம்பை 21-லிருந்து 23-ஆக உயர்த்தி அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் வயது தளர்வு அறிவிப்பு இளைஞர்கள் நலன் மீதான அரசாங்கத்தின் அக்கறையை காட்டுகிறது. ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளை ராணுவ விவகாரங்களுக்கான அமைச்சகம், ராணுவ மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் விரைவில் தொடங்கும். இளைஞர்கள் அக்னி பாதை திட்டத்தின்கீழ் ராணுவத்தில் சேர்ந்து தாய்நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.