
பிழையான புரிதல் எனது உயிருக்கு அச்சுறுத்தல் - இரா.சாணக்கியன்
தனது பாராளுமன்ற உரை தொடர்பான பிழையான புரிதல் காரணமாக தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கடந்த மே மாதம் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்தை மீளப்பெற வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த வெள்ளிக்கிழமை குறிப்பிட்டிருந்தார்.
20ஆவது அரசியல் அமைப்பு திருத்தம் உட்பட நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு ஆதரவளித்தமை காரணமாகவே பலரின் வீடுகள் எரியூட்டப்பட்டதாக சாணக்கியன் வெளியிட்ட கருத்து ஏற்புடையதல்ல.
இந்த கருத்தின் மூலம் சாணக்கியன் நடந்த வன்முறைகளை ஏற்றுக்கொள்கிறாரா? மரணத்தை ஏற்றுக்கொள்கிறாரா? எனவும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்தநிலையில் இதுகுறித்து தெளிவுபடுத்தும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், ‘கடந்த மே மாதம் 20ஆம் திகதி, எனது சமீபத்திய பாராளுமன்ற உரை குறித்த ஓர் தெளிவுபடுத்துதலின் கட்டாயம் எனக்குள்ளது.
அதனடிப்படியில் நான் வன்முறையைத் தூண்டக்கூடிய எந்தவொரு நடவடிக்கைகளிலும் நான் ஒருபோதும் ஈடுபடவும் இல்லை ஆதரிக்கவுமில்லை, ஊக்குவிக்கவும் இல்லை என்பதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.
3 தசாப்தங்களுக்கு மேல் பல விதமான பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ள ஓர் சமூகத்தை நான் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற போதிலும், சமாதானம், நல்லிணக்கம் மற்றும் அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கியதாக அனைத்து இலங்கையர்களின் தேவைகள் மற்றும் அபிலாஷைகளுக்காக நான் குரல் கொடுத்து வருகிறேன். இந்நாட்டு மக்களுக்கு ஆறுதல் அளிக்கும், அவர்களுக்கு உடனடி மற்றும் நிலையான நிவாரணம் அளிக்கும், அவர்களின் தற்போதைய குறைகள் மற்றும் எதிர்கால நல்வாழ்வுக்காக எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையையும் நான் என்றும் ஆதரிப்பேன்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.