இந்திய ஜனாதிபதி தேர்தல் எப்படி நடக்கிறது? இந்த முறை யாருக்கு அதிக வாய்ப்பு?
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவி காலம் அடுத்த மாதம் (ஜூலை) 24-ந் தேதியுடன் முடிவடைகிறது.இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்ய இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணை அறிவித்துள்ளது.அதன்படி புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு ஜூலை 18-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 15-ந் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. ஜூன் 29-ந் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 30-ந் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள் ஜூலை 2 ஆகும். போட்டியிருக்கும் பட்சத்தில் ஜூலை 18-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். ஜூலை 21-ந் தேதி வாக்குகள் எண்ணி முடிவு அறிவிக்கப்படும்.
ஜனாதிபதி தேர்தலில் 776 எம்.பி.க்கள் 4,033 எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பார்கள். இவர்களது ஒட்டுமொத்த வாக்கு மதிப்பு 10 லட்சத்து 79 ஆயிரத்து 206 ஆகும். இதில் 50 சதவீதத்துக்கு மேல் வாக்கு பெறுபவர் வெற்றி பெற முடியும்.
பா.ஜனதா தலைமையிலான கூட்டணிக்கு 5 லட்சத்து 26 ஆயிரத்து 420 வாக்குகள் உள்ளன. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 2 லட்சத்து 59 ஆயிரத்து 892 வாக்குகள் உள்ளன. எந்த அணியையும் சேராத மாநில கட்சிகளுக்கு 2 லட்சத்து 92 ஆயிரத்து 894 வாக்குகள் உள்ளன.
பா.ஜ.க. கூட்டணி நிறுத்தும் வேட்பாளர் வெற்றிபெறுவதற்கு சுமார் 13 ஆயிரம் வாக்குகள் குறைவதாக தெரியவந்துள்ளது. மாநில கட்சிகளின் ஆதரவை பெற்று பா.ஜ.க. நிறுத்தும் வேட்பாளர் எளிதாக வெற்றிபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த தடவை ஜனாதிபதி தேர்தல் நடந்தபோது நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதாதளமும், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும் பா.ஜனதாவுக்கு ஆதரவு கொடுத்தன. இந்த ஆண்டும் இந்த இரு கட்சிகளும் பா.ஜனதா நிறுத்தும் வேட்பாளரை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.