வடக்கு மாகாண விவசாயிகளுக்கான உர மானியத்தை பெற்றுத் தரக் கோரி பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இந்திய துணை தூதருக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்
தற்போது விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரத்தினை பெற்றுக் கொள்வதற்கு தொடர்ந்தும் பெரும் நெருக்கடி நிலை காணப்படுகின்றது குறிப்பாக வடக்கு மாகாணத்தில் விவசாயிகளுக்கு தேவையானஉரத்தினை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் பெரும் துன்பங்களை அனுபவித்து வருகின்றார்கள்தற்போது நிலையில் சிறுபோக செய்கை மேற்கொள்ளப்பட்டு நாற்பது நாட்களை தாண்டியும் அதற்குரியஉரங்கள் கிடைக்கப் பெறாமையால் விவசாயிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்.அதாவது வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் 81 ஆயிரத்து இருநூற்று ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் உரம் மற்றும் கிருமி நாசினிகள் காணிகளை பெற்றுக் கொள்ள வழிவகை அற்றுப் போய் உள்ளதால் வடக்கு மாகாணத்தில் ஒட்டுமொத்த விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் விவசாயிகளுக்கான உரத்தை பெற்றுக் கொடுக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய துணைத்தூதுவர் ஸ்ரீ ராகேஸ் நடராஜ் அவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்கள் நேற்றைய தினம் அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார் அக் கடிதத்தில்:இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், இறக்குமதிக்கான தடை, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணிகளால், அனைத்துத் துறைசார்ந்தோரும் பாதிப்புக்கப்பட்டுள்ள போதும், விவசாயிகள் அதிகூடிய தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதனால் இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த நாடு மிகமோசமான உணவுப் பஞ்சம் ஒன்றை எதிர்கொள்ள நேரிடலாம் என்பது துறைசார்ந்தோரின் எதிர்வுகூறலாக அமைந்துள்ளது.குறிப்பாக, போரின் முழுமையான நேரடித் தாக்கங்களால், நிரந்தர அரச மற்றும் தனியார் வேலை வாய்ப்புகள், தொழிற்பேட்டை வசதிகள், கைத்தொழில் உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் பெருவளர்ச்சி கண்டிராத வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பியே தமது அடிப்படைப் பொருளாதாரத்தைக் கட்டமைத்துள்ளனர். இத்தகு சூழலில் கடந்த வருடத்திலிருந்து அமுலாகியுள்ள சேதனப் பசளைகள் மற்றும் கிருமிநாசினிகளுக்கான இறக்கு மதித் தடை, அதனால் சந்தையில் இருப்பிலுள்ள பசளை வகைகளின் சடுதியான விலையேற்றம், தற்போதைய எரிபொருள் விலையேற்றமும் தட்டுப்பாடும் உள்ளிட்ட பாதிப்புக்களை சமநேரத்தில் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் நெற்பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதற்குரிய மூலப்பொருட்களின் செலவைக்கூட அதன் அறுவடை மூலம் ஈட்டிக்கொள்ள முடியாத ஆகப்பெரும் அவலத்தின் விளிம்பிற்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.இந்நிலையில் கடந்தமாதம் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறுபோக நெற்செய்கையின் கீழ், வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் கீழ்வரும் அடிப்படையில், 81இ205.60 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள போதும், அதற்கான பசளை, மருந்து என்பவற்றை பெற்றுக்கொள்வதற்கான வழிவகைகள் அற்றுப்போயுள்ளதால், வடக்கு மாகாணத்தின் ஒட்டுமொத்த விவசாயிகளும் தமது அடிப்படை வாழ்வாதாரத்தை அடியோடு இழந்து, நாட்டில் நிலவும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஈடுகொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்ட்டுள்ளனர்.ஈழத் தமிழர்களின் நலனில் தொடர்ந்து அக்கறையும், கரிசனையும் கொண்டிருப்பதோடு, அதற்காக அயராது உழைத்துவரும் எம் தொப்புள்க்கொடி உறவான இந்தியா, எமது விவசாயிகளின் நலனோம்புகைக்கு உதவும் பொருட்டு, ஏக்கருக்கு இரண்டு அந்தர் வீதம் ஆகக்குறைந்தது 8121 மெற்றிக்தொன் யூரியாப் பசளைகளை உடனடி உதவியாக வழங்க ஆவனசெய்ய வேண்டுமென்று தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். என்றும் குறிப்பிட்டுள்ளார்.