இறக்குமதி மற்றும் கடன்கள் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது - நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன்
இறக்குமதி மற்றும் கடன்கள் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும், சுய பொருளாதாரத்தில் மக்களிற்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் அது சாத்தியமில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
தமிழரசு கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை (14.05.2022) முற்பகல் அவரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் அவர் இவ்விடயத்தினை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,இலங்கையில் அரசியல் ஒழுங்குகள் வித்தியாசமான முறையில் பரபரப்புடன் சென்றுகொண்டிருக்கின்றது. முக்கியமாக இலங்கையின் பொருளாதாரம் மீளுமா உள்ளிட்ட முக்கியமான கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.70வதுகளில் இலங்கையில் ஏற்பட்ட பஞ்சம் பட்டின் போல அடுத்தடுத்த வாரங்களில் இலங்கையில் ஏற்படலாம் எனவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில்தான் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ளார்.முதலில் ராஜபக்ச குடும்பம் குறிப்பாக கோட்டபாஜ ராஜபக்ச பதவி விலகி செல்ல வேண்டும் என குரல் கொடுத்தவர்களில் ஒருவராக ஒரு ஆசனத்துடன் பாராளுமன்ற வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் மிக பகிரங்கமாகவே இந்த கோரிக்கையை முன்வைத்து வந்தார்.அவருடைய கோரிக்கைகள் இப்பொழுது காற்றிலே பறக்கவிடப்பட்டு அதே ராஜபக்ச அரசியல் பதவியேற்றிருக்கின்றார். ஆனால் அவரது காலத்தில் சிலர் பொருளாதார மாற்றங்கள் வரும் என்று நம்புகின்றார்கள். பசில் ராஜபக்ச பொறுப்பேற்ற காலத்திலும் இவ்வாறுதான் செய்திகள் வந்தன.ஆனால் இலங்கையில் பொருளாதாரம் அதள பாதாளத்திற்குள் சென்றுள்ளது. அதனை கட்டியெழுப்ப நீண்ட காலங்கள் செல்லும். அதாவது மக்கள் தாம் வாழமுடியும் என்று நம்பிக்கை கொள்ளக்கூடிய சுய பொருளாதார சூழல் ஏற்பட வேண்டும். அதற்கான உரவகைகள் உள்ளிட்ட விடயங்களை மேற்கொண்டு கொடுக்கும்போதுதான் பொருளாதாரம் ஓரளவு முன்னிலையை கொடுக்கும்.அதைவிடுத்து மசகு எண்ணையை இறக்கி அதனை சுத்திகரித்து ஏற்றுமதி செய்வதோ அல்லது, துணியை இறக்குமதி செய்து புடவையாக ஏற்றுமதி செய்வதோ முடியாத ஒன்றாகும். அதேவேளை சுற்றுலா உள்ளிட்ட விடயங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடன்களை நம்பி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது.அந்த வகையில் ரணில் விக்ரமசிங்கவின் வருகை ஆரோக்கியமானதாக இருக்கும் என்று குறிப்பிட விரும்பவில்லை. அவருடைய அரசு தக்கவைக்கப்படுமா அல்லது கொண்டுசெல்லப்படுமா என்பதை எதிர்வரும் நாட்கள்தான் தீர்மானிக்கும்.இந்த நிலையில் போராட்டங்களும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் எங்களது மக்களின் சுய பொருளாதாரம் தொடர்பில் நாங்கள் கவனம் செலுத்தி அதனை கட்டியெழுப்ப கடும் முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம் என தெரிவித்தார்.