அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பது தான் திராவிட மாடல் ஆட்சி
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் திமுக சார்பாக நிதிநிலை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்கு வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து இந்த கூட்டம் நடத்தப்பட்டது. பொதுக்கூட்டத்தின் போது அமைச்சர் தா.மோ. அன்பரசன் முதலமைச்சருக்கு சால்வை அணிவித்து செங்கோல் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “"என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்புகளே" என கலைஞர் அழைக்கும் போது உணர்ச்சி பெருக்காக இருக்கும். நாடாளுமன்ற தேர்தலில் இந்திய அளவில் 3வது பெரிய கட்சியாக திமுக உருவானது. ஊரக உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என வரலாற்றில் இதுவரை இல்லாதவாறு வெற்றியை அடைந்து இருக்கிறோம். இதற்கு உழைத்த கழக உடன்பிறப்புகளுக்கும், வாக்களித்த மக்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். உங்களை உயிருக்கு உயிராக நினைக்கிறேன்.
எண்ணற்ற திட்டங்களை அரசு செய்து இருக்கிறது. இதை அனைத்தையும் 10 மாதங்களிலேயே நிறைவேற்றி இருக்கிறது நமது அரசு. தற்போது அறிவித்து இருக்கும் நிதிநிலை அறிக்கையில் இருக்கும் திட்டங்களை நிறைவேற்றும் போது தமிழ்நாடு தன்னிகரில்லாத மாநிலமாக மாறும்.
ஆட்சியின் இலக்கு என்ன, எத்தகைய தமிழ்நாட்டை உருவாக்க இருக்கிறோம் என்பதை விளக்கும் வகையில் நிதிநிலை அறிக்கை அமைந்து இருக்கிறது. இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றும் வகையில் இந்த நிதிநிலை அறிக்கை அமைந்து இருக்கிறது. விளிம்புநிலை மக்களை மேம்படுத்தும் சமூகநீதி திட்டங்கள், கல்வி,மருத்துவ கட்டமைப்பு மேம்படுத்தும் திட்டங்கள், மகளிர் நலனை உயர்த்தும் திட்டங்கள், தலைமுறைகளுக்கு இடையே உள்ள சமத்துவத்தை கொண்டு சேர்க்கும் திட்டங்களை உள்ளடக்கியதாக நிதிநிலை அறிக்கை இருக்கிறது. கல்வியில் மேம்பட்ட சமூகமாக தமிழ்நாட்டை மாற்ற 'நான் முதல்வன்' என்ற பெயரில் திட்டம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவின் மாநில சுயாட்சி கொள்கையை, மாநில உரிமைகளை, பிற மாநிலங்களும் பேச தொடங்கி இருக்கின்றன. தமிழ்நாட்டில் இருக்கும் திராவிட மாடலை பிற மாநிலங்கள் உற்று நோக்கி இந்தியா முழுமைக்கும் திராவிட மாடலை கொண்டு சேர்க்க தொடங்கி இருக்கின்றன” என பேசினார்.