கன்னியாகுமரியில் நள்ளிரவில் திடீரென உள் வாங்கிய கடல்
தமிழகத்தில் கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி ஏற்பட்ட சுனாமி என்னும் ஆழிப்பேரலைக்கு பிறகு கன்னியாகுமரி கடலில் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
அமாவாசை மற்றும் பவுர்ணமி போன்ற முக்கியமான நாட்களில் கன்னியாகுமரி கடலில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. கடல் சீற்றம், கடல் கொந்தளிப்பு, கடல் உள்வாங்குவது, கடல் நீர் மட்டம் தாழ்வது மற்றும் உயர்வது, கடல் நிறம் மாறுவது, அலையே இல்லாமல் அமைதியாக குளம் போல் காட்சி அளிப்பது, போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
பவுர்ணமியையொட்டி கன்னியாகுமரியில் நேற்று இரவு கடல் “திடீர்”என்று உள்வாங்கி காணப்பட்டது. சுமார் 50 அடி தூரத்துக்கு கடல் உள்வாங்கி இருந்தது. இதனால் கடலுக்கு அடியில் இருந்த பாறைகள் மற்றும் மணல் திட்டுகள் வெளியே தெரிந்தன.
இதைப் பார்த்து கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி கால் நனைக்க அச்சப்பட்டனர். ஆனால் எந்தவித அச்சமுமின்றி மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று விட்டு கரைக்கு திரும்பினர்.