இலங்கை அரசானது எமது பிரதேசத்தின் வளங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்கிறது கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச தலைவர்
இலங்கை அரசானது மக்கள் பற்றி சிறிதும் சிந்திக்காது எமது பிரதேசத்தின் வளங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக பூநகரி கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச தலைவர் பிரான்சிஸ் ஜோசப் தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தின் மன்னார் பூநகரியில் இரண்டு பாரிய அளவிலான மீள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்டத்திற்கு இந்தியாவின் அதானி குழுமத்துக்கு ஒதுக்கீடு செய்யும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் அரசாங்கம் கடந்த வெள்ளிக்கிழமை கைச்சாத்திட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கின்றது.
இந்த நிலையில்; குறித்த இந்திய அதானி குழுமத்துக்கு பூநகரியில் இரண்டு பாரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு கரையோரப் பகுதிகளை வழங்குவது தொடர்பில் இன்று (14-03-2022)ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.இன்று எரிபொருள் இன்மை காரணமாக மட்டுப்படுத்திய தொழிலை எமது தொழிலாளர்கள் மேற்கொள்ள வேண்டிய நிலை தோண்றியுள்ளது.எரி பொருள் இல்லாத காரணத்தினால் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
குறிப்பாக 40 கடல்மைல்களுக்குச் சென்று தொழில் செய்யவேண்டிய தொழிலாளர்களுக்கு தேவையான எரிபொருள் கிடைப்பதில்லை ஆனால் குறைந்த அளவு எரிபொருளைக் கொண்டு ஒரு சில தொழிலாளர்கள் மாத்திரமே தற்போது தொழிலுக்குச் சென்று வருகின்றனர்.ஏனைய மீனவர்கள் தொழிலுக்குச் செல்வதில்லை.
இந்த அரசு எதை செய்தாலும் மக்கள் பற்றி சிந்திப்பதில்லை அதாவது பூநகரி பிரதேசத்தில் இந்த காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கு தொடர்ந்து நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற போதும் இதுவரை மக்கள் பற்றி சிந்திக்காத அரசாங்கம் இப்போது இவ்வாறு இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையொப்பமிட்டதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டு இருக்கின்றோம்.
இத்திட்டத்தினால் எதிர்காலத்தில் கடற்தொழில் பாதிக்கப்படும் அதேபோல கால்நடை வளர்ப்பு பாதிக்கப்படும் அவ்வாறு இந்த பிர தேசத்தில் அனைத்து மக்களின் வாழ்வாதாரம் முழுமையாகப் பாதிக்கப்படும் இந்த மக்களை பற்றி சிந்திக்காத அரசாக இந்த அரசு உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்