
கண்ணிவெடி அகற்றுதல் நடவடிக்கை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான டீசலினை பெற்றுத்தருமாறு மாவட்ட அரச அதிபரிடம் கோரிக்கை
முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் சர்வதேச தொண்டு நிறுவனத்தினர் தமது செயற்றிட்டத்தினை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான டீசலினை பெற்றுத்தருமாறு மாவட்ட அரச அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பல்வேறு செயல்பாடுகள் முடங்கி போயுள்ளதுடன் பொதுமக்களும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் எரிபொருளை பெற்றுக் கொள்வதில் பல்வேறு நெருக்கடிகள் காணப்படுகின்றன இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றல் நடவடிக்கையில்; ஈடுபட்டு வரும் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு பணியாளர்களை ஏற்றி இறக்குவது மற்றும் கனரக வாகனங்களை இயக்குவதற்கு எரிபொருள் பற்றாக்குறை காரணமாக வேலைகளை முன்னெடுப்பதில் தொடர்ந்தும் நெருக்கடி நிலை காணப்படுவதாக அந்நிறுவனத்தின் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கு தடையின்றி பணிகளை முன்னெடுக்க கூடிய வகையில் எரிபொருளை பெற்றுத்தருமாறு மாவட்ட அரசாங்க அதிபரிடம் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதுஇது தொடர்பில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் சர்வதேச தொண்டர் நிறுவனத்தினர் நேற்று முன்தினம் மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் வைத்து மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.இக் கலந்துரையாடலின் போது தற்போதைய காலத்தில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் தமது செயற்றிட்டத்தினை தடையின்றி முன்னெடுத்துச்செல்வதற்றகாக டீசலினை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதற்கு பதிலளித்த மாவட்ட அரசாங்க அதிபர் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு இது தொடர்பில் தெரியப்படுத்தி நடவடிக்கையெடுப்பதாக தெரிவித்தார். மேலும் குறித்த பகுதியில் சுமார் 450 தொடக்கம் 500பணியாளர்கள் தங்கியிருந்து பணியாற்றுவதால் அவர்களுக்கான உணவுத்தேவைக்காக அம்மாச்சி போன்றதான ஓர் உணவகத்தை அமைப்பது தொடர்பிலும் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர்.
அதனூடாக வேலை வாய்ப்புக்கள் உருவாகுவதுடன் தமது பணி நடவடிக்கைகள் இலகுவாக்க முடியும் என்பதையும் சுட்டிக்காட்டியிருந்தனர்.இது தொடர்பில் உரிய தரப்பினருக்கு தெரியப்படுத்தி பரிசீலிப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் குறிப்பிட்டார். குறித்த சந்திப்பில் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் சர்வதேச தொண்டர் நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் ஸ்ரிபன் ஹோல், நடவடிக்கை முகாமையாளர் விதூசன் அன்ரனி, அலுவலக முகாமையாளர் பா.ஜெயராஜிதன், அளவைகள் மற்றும் இணைப்பு அலுவலர் அருள்நேசராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.