
சீரழிந்த தாயகத்தை கட்டியெழுப்ப அனைவரும் அணி திரள வேண்டும்
பால்மாவிற்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி கடைகளில் கஞ்சா விற்பது போல் விற்பதை எமது நாட்டு மக்கள் ஒரு போதும் மறக்க போவதில்லை. நாம் இவ்வளவு காலமும் பயணித்த அந்தப் பாதையை விட்டு மாற்றுப் பாதையை காண்பதற்காகவே தற்போது நாடு முழுவதும் பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
மீனவர்கள் கடலுக்கு சென்று ஆழ் கடல் மீன்களை பிடிக்க முடியாத அளவிற்கு இன்று எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய மக்கள் சக்தியின் தலைவருடான அனுரகுமார திசாநாயக தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பகுதியிலுள்ள தனியார் வரவேற்பு மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சீரழிந்த தாயகத்தை கட்டியெழுப்புகின்ற தீர்வு நிகழ்வு நேற்று (04) இரவு தேசிய மக்கள் சக்தியின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் ஏ.ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்ற வேளை அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, இன்று எமது நாடு பாதாளத்திற்கு சென்று விட்டது. நாம் இதனை இப்படியே விட்டு வைப்போமேயானால் எமது எல்லா வளங்களையும் வெளிநாட்டுக்கு விற்று அமைச்சர்களும் அரசில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களில் தங்கியிருக்கும் வர்த்தக பிரமுகர்களும் வசதிபடைத்தவர்களாக சந்தோசமாக சுகபோக வாழ்க்கையை அனுபவிப்பார்கள். ஆனால் எமது நாட்டிலுள்ள ஏனைய மக்கள் பால்மாவிற்காகவும், எரிவாயுக்காகவும் , சீமேந்திக்காகவும் , எரிபொருட்களுக்காகவும் நீண்ட வரிசையில் கால்கடுக்க நின்று கூடுதல் விலைகொடுத்து பொருட்களை கொள்வனவு செய்யும் மிகவும் மோசமான நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நாட்டை எமக்கு வாழக்கூடிய ஏற்ற நாடாக தயாரித்துக் கொள்ள வேண்டும். எமது பிள்ளைகளின் எதிர்காலம் நம்பிக்கை ஏற்படும் என்ற வகையில் எமது நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சியடைந்த உலக நாடுகளுக்கு ஒப்பாக சகல இன மக்களிடையேயும் ஒற்றுமையை ஏற்படுத்தும் நாடாக இந்த நாட்டை உருவாக்க வேண்டும் என கூறினார்.