யாழ். தீவகப் பெண்கள் தொடர்பில் வடக்கின் ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ள கருத்து மிகுந்த மன வேதனையை தந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ள வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்கள்
யாழ். தீவகப் பெண்கள் தொடர்பில் வடக்கின் ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ள கருத்து மிகுந்த மன வேதனையை தந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ள வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்கள் அத்தகைய கருத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாக’ தெரிவித்துள்ளதுடன் எழுந்தமானதாகவும் இருக்கின்ற பிரச்சினைகளை விடுத்து புதிய பிரச்சினைகளை தோற்றுவிக்கும் முகமாகவும் கருத்துக்களை ஒரு ஆளுநர் தெரிவித்திருப்பதானது அவரது அந்தப் பதவிக்கும் அப்பதவி ஏற்படுத்தியிருக்கும் விம்பத்துக்கும் பொருத்தமாக இருப்பதாக கருதவில்லை என்றும் தெரிவித்துள்ளர்.வேலணை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் (24) தவிசாளர் கருணகரகுருமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதன்போது பிரதேசத்தின் பல்வேறு அபிவிருத்திகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப் பட்டிருந்ததுடன் அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் ஆராயப்பட்டது.இந்நிலையில் சபையின் உறுப்பினர் மேரி மரில்டா ஆளுநர் தெரிவித்ததாக வெளியான செய்தியை சுட்டிக்காட்டி கண்டன தீர்மானம் ஒன்றை கொண்டுவந்திருந்தார். இதன்போதே சபையின் அனைத்து உறுப்பினர்களாலும் ஆளுநரது குறித்த விடயம் கண்டிக்கப்பட்டதுடன் அதற்கு அவர் மன்னிப்பு தெரிவித்து செய்தி வெளியிட வேண்டும் என்ற தீர்மானத்தையும் ஏகமனதாக நிறைவேற்றி அதை அளுநருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறும் தீர்மானித்திருந்தனர்.இது தொடர்பில் உறுப்பினர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில் -.ஆளுநரது கருத்தை தீவகம் சார் சபையான எமது வேலணை பிரதேச சபை வன்மையான கண்டனங்களை தெரிவிப்பதுடன் மாவட்ட செயலகம் குறிப்பிட்டாக தெரிவித்திருக்கும் இவ்வாறான பல மாறுபட்ட கருத்துக்களை வெளியிடும் முன்னர் அளுநர் என்ற பதவியின் பொறுப்பை உணர்ந்து அவ்விடயத்தை ஆராய்ந்து உண்மையை அறிந்து அதன் சாதக பாதகங்களை கருத்திற் கொண்டு கருத்துக்களை வெளியிட்டிருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியிருந்தனர்.மேலும் யுத்தம் ஏற்படுத்தி தந்த அவலங்களும் அண்மைய கொரோனா தொற்றின் தாண்டவமும் பல பெண்களின் வாழ்வியலை முழுமையாக புரட்டிப்போட்டுள்ளது. அதன் தாக்கத்தால் அவர்களது வாழ்வாதாரத்திற்கான பொருளாதாரத்தில் பின்னடைவு கைம்பெண்கள் குடும்பம், கல்வியில் பின்னடைவு போன்ற காரணங்களால் தீவகத்தில் மட்டுமல்லாது வடக்கின் பல பாகங்களிலும் பல பெண்கள் தலைமை ஏற்று நடத்தும் குடும்பங்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு முகங்கொடுதும் வந்துகொண்டிருந்கின்றனர்.அத்துடன் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்பது தீவகத்தில் மட்டுமல்ல வடக்கில் ஏன் நாடு முழுவதிலும் பெரும்பான்மையான முதன்மை வகிக்கும் ஒரு பிரச்சினையாகவும் காணப்படுகின்றது. இதை ஆளுநர் ஜீவன் தியாகராஜா அறிந்திருக்கவில்லையா? என்றும் கேள்வி எழுப்பியிருந்தனர்.அத்துடன் ஆளுநர் என்பவர் அவரது ஆளுமைக்கும் ஆற்றலுக்கும் ஏற்றவகையில் செயற்படுவது அவசியம். அதை அவர் எதிர்காலத்திலாவது செயற்படுத்தி இந்த மாகாணத்தில் காணப்படும் பெண்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அவர்களது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் பிரச்சினைகளிலிருந்து அவர்களை மீட்டு ஒரு சுய பொருளாதாரத்தை பெற்றுக்கொடுப்பதற்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் அர்த்தபூர்வமாக எதையாவது சாதித்தால் அவரது பொறுப்புக் காலம் ஒரு பொற்காலமாக அமையும்.அத்துடன் வடக்கின் அளுநர் அரச திணைக்களங்கள் கூறிய தகவலை ஆராய்ந்து தெரிந்து கொள்வதில் அக்கறை காட்டுவதை விடுத்து தீவகத்தில் சில பெண்கள் நடவடிகக்கைகளில் தொடர்பாக சமூகப்பொறுப்பற்ற கருத்தை வெளியிட்டிருப்பது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதை தீவகத்தில் வாழும் எந்த குடிமகனும் ஏற்றுக்கொள்ளப் போவதும் கிடையாது.இதேநேரம் ஆளுநர் பெண்கள் விடயத்தில் மனச்சாட்சியுடன் அக்கறை எடுப்பாராக இருந்தால் பெண்கள் சார்பில் நாங்களும் அவருக்கு உதவுவதற்கும் அவர் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை வெற்றிகொள்ள செய்யவும் தயாராகவே இருக்கின்றோம்.அதற்கு ஆளுநர் முன்வருவாரா? அல்லது அளுநரின் பார்வை தொடர்ந்தும் ஒரு மாறுபட்ட கோணத்தில் தான் இருக்கப்போகின்றாரா? என்பதையும் அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.இதேநேரம் மாவட்ட செயலகம் குறிப்பிட்டாக தெரியப்படுத்தியிருக்கும் கருத்தை அளுநர் பொறுப்பானவராக ஆராய்ந்து அறிந்து கருத்துக்களை வெளியிட்டிருக்க வேண்டும். மாறாக இவ்வாறான கருத்துக்களை பொறுப்பிலுள்ள ஒருவராக இருந்துகொண்டு வெளியிடுவதானது அவரது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துமே தவிர அவருக்கு கொடுக்கப்பட்ட பணியாக அமையாது என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..முன்பதாக யாழ். தீவகத்தில் சில இடங்களில், சில பெண்கள் சமூக பிறழ்வான நடத்தையில் ஈடுபடுவதாக தமக்கு கிடைத்த தகவல் மிகுந்த வருத்தமளிப்பதாக தெரிவித்திருந்த ஆளுநர் ஜீவன் தியாகராஜா, அவ்வாறானவர்களுக்கு உதவ தாம் தயாராக இருப்பதாகவும் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளமை குறிப்பிடத்த்ககது.