
பாரிய நீர்ப்பாசன குளமான முத்தையன்கட்டு குளத்தின் கீழ் இவ்வாண்டு 3731 நிலப்பரப்பில் சிறுபோக செய்கை தீர்மானம்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமாக காணப்படும் முத்தையன் கட்டுக் குளத்தின் இவ்வாண்டுக்கான சிறு போக பயிர்செய்கை கூட்டம் நேற்று (17-02-2022) பிற்பகல் நடைபெற்றுள்ளது.முத்தையன்கட்டு குளத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைகளை விரைவாக முன்னெடுக்கும் அதே நேரம் சிறுபோக செய்கைகளையும் முன்னெடுப்பது தொடர்பில் கடந்த காலங்களில் கலந்துரையாடப்பட்டு வந்தது.அந்த அடிப்படையிலேயே இவ்வாண்டு சிறுபோக செய்கையினை விரைவாக முன்னெடுக்கும் பொருட்டு சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வது தொடர்பான பயிர்ச் செய்கை கூட்டம் நேற்று பிற்பகல் பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர் என். சுதாகரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.குறித்த கலந்துரையாடலில் 3731 நிலப்பரப்பில் சிறுபோக செய்கை மேற்கொள்வதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அதாவது 2746 ஏக்கர் நிலப்பரப்பில் நெற் செய்கையும் 984 ஏக்கர் நிலப்பரப்பில் உபஉணவுப் பயிர்ச் செய்கைகளையும் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளன.அத்துடன் பயிர்ச் செய்கைக்கு எதிர்வரும் முதலாம் திகதி குளத்தின் நீர் திறந்துவிடப்படும் என்றும் எதிர்வரும் யூலை மாதம் 15ம் திகதி வரையான காலப்பகுதியில் நீர் விநியோக காலப்பகுதியாக இருக்கும் என்றும் குறித்த காலப்பகுதியில் விவசாயிகள் தங்களுடைய பயிர்ச் செய்கைகை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக பிரதி நீர்ப்பாசன பெறியியலாளர் தெரிவித்துள்ளார்.