
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் முன்பள்ளி ஆசிரியர்கள் சம்பளஅதிகரிப்பு மற்றும் நிரந்தர நியமனம் கோரி கவனயீர்ப்பு போராட்டம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்விவலயத்திற்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் தமக்கான சம்பளஅதிகரிப்பு மற்றும் நிரந்தர நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உள்ளடங்கியதான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்னால் இன்று(17-02-2022) காலை 10.00மணியளவில் முன்னெடுத்துள்ளனர்.
முன்பள்ளிகளில் கற்பித்தல் செயற்பாடுகளில் பல்தரப்பட்ட கற்பித்தல் செயற்பாடுகளில் தங்களைப் பயன்படுத்துகின்ற போதிலும் தங்களுக்கு மாதம் வெறுமனே ஆறாயிரம் ரூபா கொடுப்பனவு மட்டுமே வழங்கப்படுவதனை சுட்டிக்காட்டியதுடன் இதனால் குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாவதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கு தெரிவித்தும் இதுவரை தமக்கான உரிய தீர்வுகள் கிடைக்கப்பெறவில்லை. எனவே தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாதிருப்பதால் மாவட்டங்களில் குறித்த கவனயீர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதன்போது எம் விதியை மாற்று எமக்கு வழிகாட்டு!, அத்திவாரம் எழும்பும் எம்மை படுகுளியில் தள்ளாதே, 6000ரூபா ஊக்குவிப்பு தொகை இன்று போதுமா?, நிரந்தர நியமனம் வேண்டும்! போன்ற பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதுடன் தங்களது கோரிக்கைகள் உள்ளடங்கிய மகஜரை முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களிடம் கையளித்திருந்தனர். அதனைப் பெற்றுக்கொண்ட மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்களின் ஆதங்கங்களை கேட்டறிந்து கொண்டதுடன் குறித்த கோரிக்கைகள் உரிய நடவடிக்கைகளுக்காக வடமாகான ஆளுநர் மற்றும் கல்வி அமைச்சுக்கு முறைப்படி அனுப்பிவைக்கப்படுமென தெரிவித்தார்.